|
அல்லாஹ்வின்
விருந்தாளிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்
கொடுத்து வைத்தவர்களே
குதூகலமாய் போய்
வாருங்கள்!
*
உங்கள் ஆன்மாவுக்கு
சமிக்ஞை....
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்
கஅபாவை கட்டி முடித்த
கையோடு
கலீலுல்லாஹ் இப்ராஹிம்
நபிகளின்
பாங்கோசை அப்போதே
கொடுக்கப்பட்டது
*
இப்போது விருந்தாளிப்
பட்டயம்
விநியோகிக்கப்படுகிறது
*
"லப்பைக் அல்லாஹும்ம
லெப்பைக்"
'இதோ ஆஜராகி விட்டேன்'
என்று
உடலை மட்டும்
ஆஜர்ப்படுத்தி விட்டு
உள்ளத்தை உங்கள்
ஊரிலல்லவா
உலவ விட்டு
வந்துள்ளீர்கள்!
*
அனைத்துலக அதிபதி முன்
அடக்கமுள்ள அடிமையின்
பண்பு
'இஹ்ராம்' ஆடையில்
இருப்பதேயாம்!
பக்கிரி கோலத்தைப்
பறைசாற்ற
பண்டார கோலத்துக்கு
உரைசாற்ற
இஹ்ராம் உடையே ஏற்றது!
மற்றதெல்லாம் இதன்முன்
தோற்றது!
*
விரும்பிழைத்தவன்
உங்களை
வெறுங்கையோடவா
அனுப்புவான்?....
நம்பிக்கையோடு நடை
போடுங்கள்!
தூய்மையை எண்பிக்கும்
செயல் பேணுங்கள்!
ஹரம் ஷரீபை வலம்
வருவதும்
வாய் மணக்க தஸ்பீஹை
உயிர் கலந்து ஓதுவதும்
உள்ளச்சத்தோடு
தொழுவதும்
எழுவதும்தான் உங்கள்
வேலை!
*
நிரந்தர நோயாளிக்கு
எந்த வைத்தியன்
பிரியாணி கொடுக்கிறான்?....
*
உணவுக் கட்டுப்பாடும்
உள்ளக் கட்டுப்பாடும்
ஒருங்கிணைந்தால்தான்
சொஸ்தம் சீக்கிரம்
கிடைக்கும்!
*
பாவமூட்டை சுமந்தவர்கள்
பத்தியமாயிருந்தால்தானே
பலன் கிடைக்கும்!எனவே
புலன் அடக்கும்!....
லட்சக்கணக்கில்
செலவழித்தது
இறையில்லத்தைக் காணவா?....
வாய் ருசிக்கும் உணவைப்
பேணவா?
விட்டுத்தொலையுங்கள்
உங்கள் வீண் அவா!
*
அடக்கியாளும் மன்னவன்
முன்கூட
அடக்கமாய் நடக்க
முடியாதா?
இடக்கு செய்யும்
இப்லீஸுக்கு
கல்லெறியத் தானே
கடல்தாண்டி வந்தீர்கள்? |
கஅபா, ஸபா, மர்வா, மினா,
முஜ'தலிஃபா
அரபாத் இடங்களெல்லாம்
உங்களைப்
பரிசுத்தப் படுத்தும்
களங்கள்!
தூய்மை விளையும்
நிலங்கள்!
தேடிப்
பெற்றுக்கொளவீர் நலங்கள்!
*
ஜம் ஜம் அமுத நீர்
தாகத்துக்கு மட்டுமல்ல.....
நல்லெண்ண விதைகள்
முளைக்கச் செய்யும்
நபிவழி மருத்துவ நீர்!
*
தவ்பா செய்வதும்
மனநிறைவாக
தர்மம் செய்வதும்
அன்றாடக் கடமைகளில்
ஒன்றாக்கிக்
கொள்ளுங்கள்.
*
அரபாத் பெருவெளியில்
தங்குதல்மூலம்
அல்லாஹ்வின் கருணை
பொங்கட்டும்!
*
மதினா செல்லுமுன்....
மரியாதைக்கு பொருள்
என்னவென்று
புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் காணப் போவது....
நபிகள் (ஸல்)
கல்லறையல்ல அது!
தோற்றம் அப்படி
யிருக்கலாம்.....
*
வாய் மணக்கச் சொல்லும்
சலாத்துக்கு
சுடச்சுட
உயிர் மணக்க பதில்
தரப்படுகிறது....
*
கல்லறை பதில் சொல்லுமா....
ஏமாற்றத்துக்கு
இடஙகொடுக்காதீர்கள்!
*
உயிர் மூலத்தோடு
உரையாடும் பாக்கியம்
காருண்யரின் கடைக்கண்
பார்வை
எல்லாருக்கும்
கிடைக்கட்டும்!
*
அனைத்துலக
முஸ்லிம்களின்
அன்பின் சலாத்தை
அடக்கமாக, அமைதியாகக்
கூறுங்கள்!
பதில் நிச்சயம்
கிடைக்கும்!
பரவச நிலை உயிரில்
கலக்கும்!
*
மோட்சம் தரும்
சலவாத்தை
முழங்குங்கள்! அங்கு
தங்கும்
எட்டுநாள் உறவில்தான்
ஈருகை நன்மை
ஒளிர்விடும்
உண்மை உணர்வீர்கள்!
*
சலாமத்தோடு
திரும்பிவாருங்கள்!
மனிதப் புனிதராய்!
மதிப்பிற்குரிய
ஹாஜியாய்!
*
|