முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

காலையில் எழுந்தவுடன்

(எம்.ஏ. ராஜசேகரன்)

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்திப்படம் (Document) பார்த்தேன். அதில் ஒரு நிறுவனத்தின் உயர் அலுவலர், அலுவலகம் செல்லுவதற்காக நன்றாக உடை உடுத்தியபின், குடும்பத்துடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சிறிய பெண், கை தவறி அவர் மேல் காபியைக் கொட்டி விடுகிறாள்.  அலுவலர், மிகுந்த கோபத்துடன் எரிச்சலுடன், உடைகளை மாற்றிக் கொண்டு அலுவலகம் செல்கிறார். அலுவலகத்தில், சிறிய தவறுக்காக, தன் கீழ் வேலை செய்யும் அலுவலரை கடிந்து கொள்கிறார். அந்த அலுவலர் தனது உதவியாளரைக் கோபிக்கிறார். உதவியாளர் ஏவலாளியிடம் எரிந்து விழுகிறார். ஏவலாளி சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லும்போது, பணியாளரிடம் சண்டை போடுகிறார். இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது. பின்னர் இவற்றை அறிந்த உயர் அலுவலர் இவற்றுக்கெல்லாம் முதல் காரணம் தனது பொறுமையின்மையே என்று வருத்தப்படுகிறார்.

 

காலையில் நாம் மேற்கொள்ளும் மனநிலை, நம்மையும் மற்றவர்களையும் எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை இந்தப் படம் நன்றாக விள்க்கியது. பொதுவாக, பலருக்குக் காலையில் படுக்கையை விட்டு உடனே எழுந்திருக்க மனம் வருவதில்லை. இன்னும் அய்ந்து நிமிடங்கள் தூங்கலாம் என்று நினைத்து, இழுத்துப் போர்த்திக் கொள்வர். பிறகு கண் விழிக்கும் போது, அரைமணி சென்று விட்டது என்பதையறிந்து, அரக்கப் பரக்கக் காலைக் கடன்களைச் செய்ய ஓடுகிறார்கள். நடுவில் ஏதாவது தடங்கள் ஏற்பட்டால் எல்லார் மேலும் கோபம் வருகிறது இயற்கையே.

 

அலுவலகத்திலோ, வீட்டிலோ, ஏதரவது பிரச்னை என்றால், காலையில் விழத்தவுடன், இன்றைய நாள் எப்படிப் போகப் போகிறதோ என்ற கவலையும் பயமும் கூடி ஏற்படும். ஏன்தான், பொழுது விடிகிறதோ என்றுகூடத் தோன்றும்.

 

இப்படி நினைக்க வேண்டியதே இல்லை. எல்லா மதங்களும், காலைப் பொழுதை மகிழ்ச்சியாக வரவேற்கின்றன. வெங்கடேச சுப்ரபாதத்தில், மூவுலகில் மஙகளம் தழைக்கும்படிச் செய்ய வேணடுமெனப் பெருமாளை வேண்டுகின்றனர். திரு்வாசகத்தில், திருப்பள்ளியெழுச்சி என்ற பதிகத்தில், "மலரும் எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுதோம்" என மாணிக்க வாசகர் சிவபெருமானிடம் வேண்டுகிறார். விவிலியம் "இந்த நாளை, இறைவன் எமக்குத் தந்தார். இதில் நாம் மகிழ்வோம்" எனக் கூறுகிறது. எனவே காலையில் மகிழ்ச்சியாய் இருப்பதுதான் இயல்பாய் நிகழ வேண்டியது.

 

நாம் விழித்தெழும் முதல் அய்ந்து நிமிடங்களில் நம்முடைய மனநிலையைச் சரியாக வைத்துக் கொள்வதன் மூலம், அந்த நாள் முழுவதையும் சரியாக வைக்க முடியும். ஹென்றி தோரு (Henry Tharue) என்ற அமெரிக்க தத்துவஞானி, காலையில் கண் விழித்தபின் சிறிது நேரம் அப்படியே படுத்திருப்பார். அவரால் நினைக்க முடிந்த நல்ல செய்திகளையெல்லாம் நினைவு படுத்திக் கொள்வார். " எனக்கு ஆரோக்கியமான உடல் இருக்கிறது. என்னுடைய மனம் சுறுசுறுப்பாய் இருக்கிறது. என்னுடைய வேலை ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது. என் மேல் நிறைய பேர் நம்பிக்கை வைத்துள்ளனர். என் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது." எனறெல்லாம் நினைத்துக் கொள்வார்.

 

காஞ்சிப்பெரியவர், வேறொரு சிறிய பயிற்சியைப் பற்றிக் கூறியிருக்கிறார். காலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய பிரார்த்தனை செய்யலாம். "இறைவா! இந்த நாள் எனக்கும் பிறருக்கும் நல்லபடியாகவும், பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்." இதை நினைப்பதற்கு சில நொடிகள் போதும். ஆனால் இதன் விளைவு நாளெல்லாம் நன்மை செய்யும்.

 

நார்மன் வின்செனட் பீல் என்ற அமெரிக்க பாதிரியார், அவருடைய நண்பர் ஒருவரைப் பற்றித் தெரிவிக்கிறார். அந்த நண்பருடைய உற்சாகம் எப்போதும் குறைவதில்லை. அதற்குக் காரணம், காலையில் அவர் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் தான். காலையில் குளித்தபின் ஒரு சிறிய ஆன்மீக அல்லது சுய முன்னேற்றக் கட்டுரையைப் படிக்கிறார். பிறகு மூன்று நிமிடங்கள் அமைதியாக மனதை வைத்துக் கொளகிறார். அன்று அவர் சந்திக்க இருக்கும் நபர்களை மனதில் நினைத்துப் பார்க்கிறார். அவர்களுடன் தனது தொடர்பு நல்லவிதமாக அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இந்தப் பழக்கத்தை செய்ய அவர் தவறுவதே இல்லை. அதிகமாகப் போனால் பத்து நிமிடங்கள்தான் இதற்குப் பிடிக்கும்.

 

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் பலருக்கு பயன் அளித்துள்ளது. தினம் காலையில் இருபது நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்ப மனதிலேயே நினைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சுற்றுப்புறச் சூழ்நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறையில் தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்படும்போது கூட சூழ்நிலை தியானம் செய்ய முடியம் என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். ஆழ்நிலை தியானத்தால், ரத்தக்கொதிப்பு போன்ற வியாதிகள் கூடக் கட்டுப்படுவதாக டாக்டர் பி. ராமமூர்த்தி தெரிவிக்கிறார்.

 

வேதாத்திரி மகரிஷி அருளிய மனவளக் கலைப் பயிற்சி, ரவி சங்கரின் தியானப் பயிற்சி முதலியவை கூட சிலருக்குப் பயன் தரும்.

 

இந்த மாதிரிப் பயிற்சிகளின் பின்னர், நேரம் செல்லச் செல்ல, நிறைய ஏமாற்றங்களும், துன்பங்களும், கெட்ட செய்திகளும் எதிர்பட்டாலும் உங்கள் மனநிலை அவற்றை அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் எதிர் கொள்ளும்.

 

"இதற்கெல்லாம் எங்கே காலையில் நேரம் இருக்கிறது?" என்று உஙகளுக்குத் தோன்றலாம். இதற்கு ஒரே வழி, மன உறுதியுடன் காலையில் சீக்கரமாக எழுந்திருப்பதுதான். ஒரு நாள் மட்டும் வழக்கத்தைவிட அரை மணி முன்னதாக எழுந்து பாருங்கள். நிறைய நேரம் இருப்பதாகத் தோன்றும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கிடைக்கும் பல நன்மைகளை விட அரைமணித் தூக்கம் உயர்வானதா என்ன?

cq;fs; ez;gUf;F ,e;jg; gf;fj;ij mDg;g....