|
சறு பொன்னே! வலம்புரி முத்தே! என்று
வர்ணனைகளைக் கேட்டிருக்கிறோம். மாசறு பொன் எது? அட்சய திருதியை
என்று கூறி தங்க நகைக் கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ள இந்த
நேரத்தில், தங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
சுத்தத் தங்கம் அல்லது சொக்கத் தங்கம் என்பது 24 கேரட் ஆகும். இதைப்
பயன்படுத்தி நகை செய்ய இயலாது. இதோடு கொஞ்சம் செம்பு கலந்தால் தான்
அதை நகையாக்க முடியும். எத்தனை கிராம் தங்கத்தில் எவ்வளவு செம்பு
கலக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தங்கத்தின் சுத்தத் தன்மை
மாறுபடுகிறது. 10.5 கிராம் சொக்கத் தங்கத்துக்கு 1 கிராம் செம்பு
சேர்த்தால் அதுவே பத்தரை மாற்றுத் தங்கமாகும். 11 கிராம்
தங்கத்துக்கு 1 கிராம் செம்பு என்ற அளவில் கலந்து கிடைப்பது 916
தங்கம். இதுவே 22 கேரட் தங்கமாகும். இதனையே ஆபரணத் தங்கம் என்கிறோம்.
இந்த 916 தங்கத்தை எடுத்துக் கணக்கிட்டால் 100 கிராம் தங்கத்தில்
91.6 கிராம் சொக்கத் தங்கம் இருக்கும். இதனால் இதற்கு 916 தங்கம்
என்றே பெயராகி விட்டது.
இதில் 916 க்குப்பின் வருகிற "கேடிஎம்' என்பது காட்மீயம் என்பதன்
சுருக்கமாகும். இந்த காட்மீயத்தை பயன்படுத்தித்தான் நகைகளை ஒட்ட
வைக்கிறார்கள். சரி இதில் நமக்கு என்ன பயன் என்கிறீர்களா?
பழங்காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு என்ற மூன்று உலோகக் கலவைகளின்
பொடியால்தான் நகைகளை ஒட்டி வந்தார்கள். இவ்வாறு ஒட்டப்பட்ட நகையை
உருக்கும்போது கிடைக்கிற தங்கம் சுத்தமாக இருக்காது. ஆனால்
காட்மீயம் உபயோகித்து ஒட்டிய தங்க நகையை உருக்கும்போது சுத்தமான
தங்கம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் , ஒட்டி முடித்தவுடன்
காட்மீயம் ஆவியாகிவிடுகிறது.
இப்படியாக கடைகளில் விற்பனைக்கு வரும் நகைகளை இது தரமான தங்கத்தில்
செய்யப்பட்டதுதானா என்று சோதித்து அதற்கு முத்திரையிடும் பணியை
இந்திய தர நிர்ணய அமைப்பு செய்கிறது. அப்படி இடப்படும்
முத்திரைக்குப் பெயர் ஹால்மார்க்.
ஆனால் இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படாததால் ஹால்மார்க்
முத்திரை உள்ள நகையும், முத்திரை இல்லாத ஏனைய நகைகளும் ஒரே கடையில்
விற்கப்படுகின்றன.
ஆனால் அந்தக் கடையின் உரிமையாளர் ஒட்டுமொத்தமாக இது ஹால்மார்க்
முத்திரைக் கடை என்று தனது கடையை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
இது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும். எனவே எந்தெந்த நகைகள்
ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளன என்பதை விழிப்புடன் பார்த்து
வாங்குவதில் தான் வாடிக்கையாளரின் சாமர்த்தியம் இருக்கிறது.
ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளிலும் கூட பல இடங்களில் ஏமாற்று
வேலை நடக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தர நிர்ணய
அமைப்பு நாடு முழுக்க உள்ள நகைக் கடைகளில் 120 தங்க நகைகளை
எடுத்துச் சோதனை செய்தது. இதில் 14 மாதிரிகளில் மட்டுமே
சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் சொன்ன அதே தரம் இருந்தது. இதைத்
தொடர்ந்து நுகர்வோருக்கு தரமான தங்க நகைகள் கிடைப்பதை உறுதி செய்ய
தேசிய அளவில் பிரத்யேக கமிட்டி அமைய வேண்டும் என்று பேச்சு
கிளம்பியது. ஆனால் இன்றுவரை அது செயல்வடிவம் பெறவில்லை.
""வாடிக்கையாளர் என்பவர் நம் கடைக்கு வரும் மிக முக்கியமான நபர்.
அவர் நம்மை நம்பி இல்லை. ஆனால் நாம் தான் அவரை நம்பி இருக்கிறோம்''
என்று மகாத்மா காந்தியடிகள் வியாபாரிகளுக்கு கூறிய அறிவுரையை இன்று
பல வியாபார ஸ்தலங்களிலும் "பிரேம்' போட்டு வைத்திருப்பதைப்
பார்த்திருக்கலாம். நடைமுறையில் இந்த அறிவுரைகள் காற்றில் பறக்க
விடப்படுவதுதான் இன்றைய வேதனை. செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என்று
விளம்பரம் செய்து தரம் குறைந்த தங்க நகைகளைத் தாராளமாக
விற்கிறார்கள். பல நகைக்கடைகளில் நகைகள் கல்லுடன் எடைபோடப்பட்டு
சாதாரண செயற்கைக் கல்லுக்கும் (அமெரிக்கன் டைமண்ட்) தங்கத்தின் விலை
வசூலிக்கப்படுகிறது. அதிக எடை இருக்குமாறு இத்தகைய செயற்கைக் கற்கள்
தயாரிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தங்கத்தின் சேதாரம்
ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சாதாரணமாக 10% முதல் 20%
வரை நகையைப் பொறுத்து சேதாரம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நகை
செய்யும்போது ஒரு பொட்டு தங்கத்தைக் கூட வீணாக்காத அளவுக்கு
விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது. தங்கத்தின் விலை நிர்ணயத்திலும்
கூட அதிக அளவில் குளறுபடிகள் தொடர்கின்றன. ஊருக்கு ஊர் தங்கத்தின்
விலையில் வித்தியாசம் உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டை நிர்ணயிப்பது அங்கிருக்கும்
தங்கத்தின் கையிருப்பு என்கிறார்கள். உலகிலேயே அதிக அளவில் தங்க
ஆபரணங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தியப் பெண்கள். இந்த நிலையில்
தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைப்பதும், தரமான தங்கத்தால்
செய்யப்பட்ட நகைகள் சந்தைக்கு வருவதை உறுதி செய்வதும் அரசின்
கடமையாகும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை நுகர்வோர் உணர
வேண்டும்.
(கட்டுரையாளர்:
நுகர்வோர் பாதுகாப்பு சங்கச் செயலர்).
Courtesy:Dinamani
|