முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை)

உலகப் பெண்களுக்கோர் உன்னத வழிகாட்டி                      www.valoothoor.com

இஸ்லாமிய வருடக் கணிப்பின் ஆறாம் மாதமான ஜமாதுல் ஆகிர் மாதம் ஐந்தாம் நாள், சர்வதேச இஸ்லாமிய மாதர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அன்றுதான், பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி ஹஸ்ரத் பாத்திமா ஹஸ்ரா (அலை) அவர்கள் இவ்வுலகில் பிறந்தார்கள். உலகப் பெண்களுக்கெல்லாம் தலைவி என புகழ்ந்துரைக்கப்படுகின்ற ஒரு வரலாற்று நாயகியின் பிறந்த நாள், சர்வதேச இஸ்லாமிய மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது எத்துணை நியாயமானது என்பதை, சமய மூலாதாரங்களின் மீதான உட்பார்வையின் அவசியமின்றியே அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

 

ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்கள், ஆன்மீகத்துடனும் இலௌகீகத்துடனும் கலந்திணைந்துள்ள உலகின் அனைத்து நடைமுறைப் பிரயோகங்களிலும், பெண்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்கின்றார்கள். அவர்கள் தெளிவான சிந்தனைப் போக்கும், தூய்மையான மனோவுணர்வும், சுயநலம், உலகியல் எதிர்பார்ப்புகள் முதலானவற்றை விட்டும் நீங்கிய செயற்பாங்கும், எல்லாவற்றுக்கும் மேலாக, பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தத் தன்மையும் கொண்டவர்களாக விளகினார்கள். இத்தகைய அதியுயர் சிறப்பையும், அந்தஸ்தையும் அவர்கள் பெறுவதற்கு அவர்களது வியாபகமான அறிவு, கற்பொழுக்கம், பயபக்தியுடனான வணக்கம், இறைமெய்ப்பொருளியல் மீதான தேடல் என்பவையோ, அல்லது இறுதி இறைத்தூதரின் இலட்சியப் புதல்வி என்ற சிறப்போ அன்றி,எல்லாம் அறிந்த ஏக இறைவனின் தெரிவும், தீர்மானமும் அவர்களைச் சுட்டியிருந்தமையே முக்கிய காரணியாகும்.

 

நபி (ஸல்) அவர்கள், இஸ்லாமியத் தூதைப் பிரசாரம் செய்யத் தொடங்கிய காலம், பெண்களின் உணர்வுகள் அலட்சியப்படுத்தப்பட்டு, அவர்களது உரிமைகள் புறத்தொதுக்கப்பட்டு, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வந்த காலமாகையால், அடக்குமுறைப் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட நபியவர்கள், அதற்குப் புனித இஸ்லாத்தின் சாத்வீகமான செயற்கட்டுகளைப் பிரயோகித்து, தமது மகளார் பாத்திமாவுடனான தமது உறவுச் செயற்பாங்குகளையும் ஒழுங்குற வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

 

நபியவர்களும் அன்னை பாத்திமா அவர்களும் தம்மிடையே மிகுந்த பாசப் பிணைப்பைப் பேணி வந்தார்கள். அது> சாதாரண நடைமுறை சார்ந்த தந்தை-மகள் பாசத்திற்கும் அப்பாற்பட்ட, தெய்வீகத் தன்மையின் நிழலில் தோற்றம் பெற்ற, அற்புத அழுத்தம் மிக்க பாசப் பிணைப்பாகவே அமைந்திருந்தது.

 

நபியவர்கள், தமது மனைவியர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரை விடவும் ஹஸ்ரத் பாத்திமாவை அதிகம் நேசித்தார்கள். அவர்களது சுக-துக்கங்கள் அனைத்திலும் தம்மையும் அக்கறையுடன் ஈடுபடுத்திக் கொண்டார்கள். எங்கேனும் பயணம் புறப்படுவதாக இருந்தால், ஹஸ்ரத் பாத்திமாவிடமே இறுதியாக விடைபெறுவார்கள்.

 

பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் ஹஸ்ரத் பாத்திமாவையே முதலில் சந்திப்பார்கள். கவலைகள், கஷ்டங்களின் பெருக்கத்தின் போது, சமய அனுஷ்டானங்களைப் பயிற்றுவித்து, அவற்றின் மூலம் அவர்களை சாந்தப்படுத்தி மகிழ்விப்பார்கள். தமது வாழ்வின் முடிவு நாள் பற்றிய அறிவையும் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு, நபியவரகள் தமது மகள் பாத்திமாவுடன் எவ்வித இரகசியமும் பேணாது வெளிப்படையைப் பேணி வந்தார்கள்.

 

'பாத்திமா என்னுடைய ஈரல் கொழுந்தாவார். ஆகவே, யார் அவரில் அன்பு கொள்கின்றாரோ, அவர் என்னையே அன்பு வைத்தவராவார். யார் அவரை வேதனைக்குள்ளாக்குகின்றாரோ, அவர் என்னையே வேதனைக்குள்ளாக்கியவராவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கருத்துரைத்திருப்பதானது, அவர்களுக்கும் ஹஸ்ரத் பாத்திமாவுக்கும் இடையில் பேணப்பட்டு வந்த உயர்தரமான அன்பை நிறுவிக் கொள்ளப் போதுமான ஆதாரமாகத் திகழ்கின்றது.

 

நபி (ஸல்) அவர்கள், தமது மகளார் பாத்திமா (அலை) அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்ததனூடாக, இரு முக்கிய அம்சங்களை உலகுக்குத் தெரியப்படுத்த விழைந்தார்கள்.

 

1: பெண்களின் இயல்பு, யதார்த்தம் என்பவற்றினது உயர்கௌரவம். அதாவது, பாத்திமாவை அன்புடனும் சுயகௌரவத்துடனான மரியாதையுடனும் நடத்துவதானது, உலகப் பெண்கள் அனைவரையும் அவ்வாறே நடத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஏனைய மனிதர்கள் அனைவரையும் உள்ளாக்கி விடக்கூடியதாக அமையும். அதன் மூலம் அடக்குமுறைகளிலிருந்து பெண் சமூகத்தை விடுவித்து, அவர்களது உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீளப் பெற்றுக் கொடுக்க முடியும் என நபியவர்கள் எதிர்பார்த்தார்கள்.

 

2: ஹஸ்ரத் பாத்திமாவுக்கு இருந்த தனித்துவமான சிறப்பு. அதாவது பாத்திமாவை கண்ணியப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய இயல்புப் பெறுமானத்தையும், பரிசுத்த யதார்த்த நிலையையும் வெளிப்படுத்தி, அவர்களே உலகப் பெண்கள் அனைவருக்குமான முன்மாதிரியும், நடைமுறை வழிகாட்டியுமாவார்கள் என்ற இறைதீர்மானப் பிரகடனத்தை தத்ரூபமாக மக்களின் உள்ளங்களில் பதித்து விட வேண்டும் என நபியவர்கள் எதிர்பார்த்தார்கள். இதன் காரணமாகவே ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்கள் சுவனத்துப் பெண்களின் தலைவியாவார் எனவும், அவர் மீதான அன்பும் அவரது வழிமுறைகள் மீதான பின்தொடர்தலும் முஸ்லிம்களின் மார்க்க அடிப்படைகளில் ஒன்று எனவும் நபியவர்கள் வௌ;வேறான சொல்லாடல்கள் மூலமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

 

இது தவிர, சமூகப் பற்றும், மார்க்கப் பிடிப்பும் இயல்பிலேயே நிரம்பப் பெற்றிருந்த ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்கள்> தமது ஒழுக்கச் செழுமை மிக்க செயற்பாடுகள் மூலமாகவும், நெஞ்சைத் தொட்டுணர்த்திச் செல்லும் உபதேசங்கள் மூலமாகவும், முஸ்லிம் சமூகத்தினது குறிப்பாக பெண்களின் வாழ்வு நிலைகளின் சமயத் தொடர்புக்கும், பரிசுத்த நிலைக்கும் களம் அமைத்து> மார்க்க இருப்பின் நிரந்தரப் பாதுகாப்பிற்கான முனைப்பான நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றிச் செயற்பட்டார்கள்.

 

புனித இஸ்லாமிய மார்க்கச் சட்டதிட்டங்கள் வலியுறுத்தும் வாழ்வியல் கோட்பாடுகளையும்> கட்டுக்கோப்புகளையும் முழுமையாகப் பேண விரும்பும் எந்தவொரு இஸ்லாமியப் பெண்ணும், தன் சிந்தனைகளையும் நடப்புகளையும் ஹஸ்ரத் பாத்திமாவின் வாழ்வுத் தாக்கங்களிலிருந்து சற்றும் தனிமைப்படுத்த முடியாதளவுக்கு அவர்களது செயற்பாடுகளும் சிந்தனைகளும் இஸ்லாத்தின் வரையறைகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்துக் காணப்படுகின்றன.

 

ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்கள் மகள், மனைவி, தாய் ஆகிய பெண்களின் மூன்று பிரதான படிமுறைகளிலும் தடம் பதித்து, அந்நிலைகளிலெல்லாம் பெண்கள் முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளையும், முடிவுகளையும் தெளிவாக முன் வைத்திருப்பதான சமூகத்தின் மீதான அவர்களது பிடிப்பை மாத்திரமன்றி, அவ்விடயங்களின் மீதான அவர்களது பரந்த அறிவையும் நன்கு அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

அந்நிய ஆண்களின் முன் தம் உடலழகை வெளிக்காண்பிப்பதும், அவர்களுடன் ஒட்டி உறவாடி நெருங்கிப் பழகுவதுமே பெண்களின் சுதந்திரமும் உரிமையும் என்ற தவறான போதனைகளினால்,  சமூகவியல் ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் அறியாமைப் பெண்கள் வாழும் இக்காலப் பகுதியில்>ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்களின் வழிமுறைகளும் முன்மாதிரிகளுமே பெண் சமூகத்தின் விடிவுக்கும், விமோசனத்திற்குமான ஒரே வழியாய் அமையுமெனில் மிகையன்று.

 

ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்கள் தர்மம், வாய்மை, நேர்மை, வீரம், வணக்க வழிபாடு, கற்பொழுக்கம், நற்குணம், பணவுத்தன்மை, இறையச்சம, மார்க்க அனுஷ்டானம், உபதேசம், சமுதாய உணர்வு என எல்லாத் துறைகளிலும் ஒப்பற்ற முன்மாதிரியாகத் திகழ்கின்றார்கள். வறுமைய, கொடிய துன்ப நிலையோ, நம்பியோரின் துரோகச் செயல்களோ அவர்களது மார்க்கப் பற்றையும் மனவுறுதிப்பாட்டையும் சற்றும் தளர்த்தி விடாதிருந்தமையானது, அவர்களது பரிசுத்த நிலையையும் இறைவனுடனான நெருங்கிய உறவுத் தொடர்பையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகின்றது.

 

பெண்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்த இஸ்லாம், சமூகவியல் பகுப்பில் அவர்களது இருப்பிற்கும் ஸ்தானத்திற்கும் முக்கியத்துவமும் இன்றியமையா மேத்தியத் தன்மையும் வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியுடனிருந்தது மட்டுமன்றி, ஹஸ்ரத் பாத்திமாவினுடைய அதீத ஆளுமையை அதற்கான உசாத்துணையாகப் பிரயோகிப்பதிலும் வெற்றி கண்டது.

 

பொதுவாக, பெண்கள் இலௌகீக நிலை சார்ந்த அனைத்தம்சங்களிலும் ஆண்களுக்கு அடுத்ததான ஸ்தானத்தையே பெற முடியுமானதாக, அல்லது ஆண்-பெண் என்ற உடலியல் பகுப்பில் இரண்டாந்தர இனமாகவே கருதப்பட முடியுமானதாக உள்ள நிலையில், அவர்களது தனித்துவம, சுயாளுமையோ வெளிக்கொணரப்படுவதற்கான சாத்தியப்பாடற்ற நில, ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்களினுடைய விசேடத்துவமான தன்மைகள், செயற்பாங்குகள் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டது.

 

ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்கள, சமூக நலனில் மிக அக்கறை கொண்டிருந்தார்கள். சமய சித்தாந்தங்களுக்கும் அனுஷ்டானங்களுக்கும் அப்பாற்பட்டு விடாத நிலையில், தான் சார்ந்துள்ள சமூகத்தைக் காத்திரமான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதென்பது, பெண்களாலும் சாத்தியப்படக் கூடிய ஓர் அம்சமே என்பதை நிறுவுவதற்கு ஹஸ்ரத் பாத்திமாவை விடச் சிறந்த முன்னோடியை வரலாற்றில் காண்பதரிது. சூழ்நிலைகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுத்தும, கிளர்ந்தெழுந்தும் சமூகத்தின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதிலோ அல்லது சமூகத்தின் மத விழுமியங்களைப் பாதுகாப்பதிலோ அவர்கள் காட்டிய அக்கறையும், தீவிரமும் விதந்துரைக்கத்தக்கனவாகும்.

 

இதன் காரணமாகவே, நபி (ஸல்) அவர்கள் மிக அழுத்தந் திருத்தமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிட்டார்கள். 'உலகத்தில் தோன்றிய பெண்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவர்கள் நால்வர்: குவைலிதின் மகள் கதீஜா, முஹம்மதின் மகள் பாத்திமா, இம்ரானின் மகள் மர்யம், பிர்அவ்னின் மனைவி ஆசியா'.

 

இந்த ஹதீஸ் பல்வேறு ஐயப்பாடுகளுக்கான தெளிவான விடையாக அமைந்துள்ளது. இம்மை நிலையின் அடிப்படையில் ஹஸ்ரத் பாத்திமாவை விடச் சிறப்புப் பெற்றவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆயினும் மறுமை நிலையின் அடிப்படையில் ஹஸ்ரத் பாத்திமாவை விடச் சிறப்பானவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒப்பானவர்களும் கூட இருக்க முடியாது என்பதை இது வரையறுத்துக் கூறுகின்றது.

 

எனவே, ஒரு சமூகத்தின் இம்மை-மறுமைக்கான தலைவி எனப் புகழ்ந்துரைக்கப்படும் அதீதச் சிறப்புத் தன்மை வாய்ந்த ஒரே பெண்மணியான ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்களை மத அறிவின் மீதான பூரணத்துவத்தில் குறைபாடுடையவர் என்றோ, சமய சமூக உள்ளீடுகள் தொடர்பில் போதிய அறிவற்றவர் என்றோ வாதிடுவது, உண்மையில் அவர்களுக்கிழைக்கும் மிகப் பெரும் அநீதியும் காடுமையுமாகும். இது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களால் எப்போதும் ஜீரணிக்க முடியாத, மன்னிக்க முடியாத தவறுமாகும்.

 

ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்கள், பெண்களுக்கான முன்மாதிரிகளை மட்டுமன்றி,  மனித ஆளுமை விருத்திக்கான அனைத்துப் பண்பாட்டு நிலைகளையும் பின்பற்றத்தக்கதான, அல்லது படிப்பினை பெறத்தக்கதான உயர் தன்மையின் அடிப்படையில் சமூகத்துக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பையும், சமய அணுகுமுறைகளுடனான அதன் இறுக்க நிலையின் அவசியத்தையும் மையப்படுத்தியதாக அவர்கள் ஆற்றிய உரைகளும், உபதேசங்களும் ஒரு முஸ்லிமுடைய மத வாழ்வியல் நடைமுறைகளின் பரிசுத்த நிலைக்கு முற்றிலும் போதுமான வழிகாட்டல்களாக விளங்குகின்றன. இதற்கமைய ஓர் ஆணோ பெண்ணோ ஹஸ்ரத் பாத்திமா(அலை) அவர்களின் ஒழுக்க நடைமுறைகளைத் தம் வாழ்வில் பிரயோகிப்பதானது, அவர்களது சமய வாழ்வின் செழிப்பு நிலைக்கும, சமூக செயற்பாடுகளின் தூய நெறிப்படுத்தலுக்கும் மிகச் சிறந்த உசாத்துணையாக அமையுமென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

 

சுருங்கக் கூறின், ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்களைப் பின்பற்றுவது, நபிகளாரைப் பின்பற்றுவதாகவும் நபிகளாரைப் பின்பற்றுவது இறைகட்டளைகளின் மீதான அடியானின் பண்பட்ட அடிபணிதலாகவும் அமைகின்றதெனக் கூற முடியும். மனிதர்களது ஆன்மீக-இலௌகீக வெற்றிக்கான அடித்தளம் மட்டுமன்றி, அதற்கான உயிரோட்டமும் இதில்தான் தங்கியுள்ளது.

 

எனவ, மாதர்குல மாணிக்கம் ஹஸ்ரத் பாத்திமா (அலை) அவர்களது வாழ்வின் பல்துறைப் பரிமாணங்களைத் தெளிந்துணர்ந்து> அவற்றின் மீதான பின்பற்றுதலூடாக, தம் வாழ்வை, சமய வரம்பிற்குள் கட்டுப்படுத்திக் கொண்டு, இம்மை - மறுமை மீதான உயர்ந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள, அனைத்து முஸ்லிம்களும் தூயசிந்தையுடனும் உள்ளார்வத்துடனும் செயற்பட முன்வரவேண்டும்.