முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

மாண்புமிகு மாணவர்களே...!
நீதி. செங்கோட்டையன்

நன்றி: தினமணி நாளிழ் 23-10-2007

மாணவர் சமுதாயம் ஆற்றல் மிக்கது; ஆனால், சமீபகாலமாக திருட்டு, ராகிங், வன்முறை, பெண்களிடம் கேலி போன்ற நெறிதவறிய பாதையில் மாணவர்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளது வருத்தம் அளிக்கிறது.

அண்மைக்காலமாக, மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தேவையற்ற போராட்டம் நம் கவலையை அதிகரிக்கிறது. அதேசமயம், மாணவர்களின் மீது போலீஸாரின் தேவையற்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதும் வேதனை அளிக்கிறது.

இந்தியா, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில், தாய் மண்ணை மீட்பதற்காக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை.

1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை மூலம் இந்திய மக்களைத் துண்டாட முயன்ற அன்னியர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவ சக்தியைக் கண்டு படைபலத்துடன் திகழ்ந்த ஆங்கிலேயர்களே அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், இன்றைய மாணவப் போராட்டங்கள் அப்படி அல்ல; மாணவர்களிடையே தேவையற்ற கோஷ்டி மோதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் அவர்களிடையே இருந்து வந்த ஒற்றுமையும் அவர்களுடைய போராட்டத்துக்கான மரியாதையும் குறையத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் சென்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட சிறு மோதல் போராட்டமாக வெடித்தது. இது போலீஸôரின் அத்துமீறல், தாக்குதலுக்கு இடமளித்து விட்டது. போலீஸôரின் தாக்குதலால் ஒரு கல்லூரியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஒரு கசப்பான சம்பவம். அதேபோல சமீபத்தில் சட்டக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் உணவகத்துக்குச் சென்ற போது போலீஸôருடன் மோதல் ஏற்பட்டது. இதில் 51 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து போலீஸôர் அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் பெரிய மோதலாகி, மாணவர் கிளர்ச்சியாகவும் உருவெடுத்தது. சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸôர் நடத்திய தடியடியில் இரு மாணவர்கள் காயமடைந்தனர்.

மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவது ஆரோக்கியமான ஒன்றல்ல. ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறவேண்டும் என்பதே ஜனநாயக மரபு.

தலைக்கே கத்தி வரும் பிரச்னையாக இருந்தாலும் அதற்கு அகிம்சைவழிப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணத்தான் முற்பட வேண்டுமே தவிர, வீச்சரிவாளுடன் வீதிக்கு வரக்கூடாது. அப்போதுதான் மாணவர் போராட்டத்துக்கு உள்ள மாண்பு நிலைக்கும்; மாணவர்தம் ஆற்றலும் குறையாது. கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்துவதில்லை, அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை; உரிமை நசுக்கப்படுகிறது, இந்தச் சமுதாயத்துக்கு எதிராக அநீதி அரங்கேறுகிறது என்றால் அதுபோன்ற நேரங்களில் செயல்படாமல் இருக்கக் கூடாது. அவற்றுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது அவசியம். ஆனால் அதுவும் அமைதியான முறையில் நடக்க வேண்டும். அவ்வாறு மாணவர்கள் நடந்து கொண்டால் ஒட்டுமொத்த சமுதாயமும் அவர்களுக்குப் பின் அணிவகுக்கும்.

கோல்கத்தாவில் உள்ள ஆசாத் பொறியியல் கல்லூரி நிர்வாகம் 2001 ஆம் ஆண்டு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரெனக் கல்விக் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே வன்முறையில் ஈடுபடவில்லை. அமைதியான முறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தங்களது கோரிக்கையில் வெற்றி பெற்றனர்.

அவர்களுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. இந்த வெற்றியை அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் எனலாம்.

ஜனநாயக நாட்டில் அரசு இயந்திரங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுதல் என்பது குற்றவாளிகளைத் தண்டித்து நெறிசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே. குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனை கூட அவர்களை நல்லவர்களாக மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

போலீஸôரின் கையில் லத்தி கொடுக்கப்பட்டுள்ளது எதற்கெடுத்தாலும் பிறரைத் தீண்டுவதற்கல்ல; சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மட்டுமே. ஆனால், அண்மைக்காலமாக போலீஸôரின்போக்கு கவலை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் வல்லமை காவல்துறைக்கு உண்டு என்பதை உணர்ந்து போலீஸார் செயல்பட வேண்டும். இதுபோல் நெறிதவறி, தேவையற்ற போராட்டங்கள் மூலம், மாணவர் சமுதாயம் தனது ஆற்றலையும் மதிப்பையும் குறைத்துக் கொள்ளக் கூடாது.

உங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப....