|
அவர்கள் (ரசூல் ஸல்லலாஹ் அலைஹி வஸல்லம்)
மலக்குகளை விட உயர்வானவர்கள்: மனிதர்களை விட மகத்துவமிக்கவர்கள்:
ஜின்களைவிட விரைவானவர்கள்: அதனால் அவர்கள் இம்மூன்றுக்கும்
அப்பாற்பட்டவர்கள், நூரானியத்தில்! அவர்கள் மனிதக் கண்களுக்கு ஒளியைக்
காட்டுவித்த பேரொளி! ஞானக் கண்களில் ஒளியைக் காட்டுவித்த
நுபுவ்வத்தொளி! உணர்வுகளால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிற எந்தச்
சுவையையும் அல்லாஹ் போதனை செய்ய அனுப்பியதில்லை ரசூலுல்லாஹ்வைத் தவிர.
அவர்கள் அறுசுவையல்ல: அர்ஷின் சுவை! அந்த இன்பத்தைச் சுவாசித்தவர்க்கே
அதன் இனம் புரியும்: அந்த இஷ்க்கில் இதயம் நிரப்பியவர்க்கே அதன் குணம்
தெரியும். மனித வடிவமாய் பெருமானார் வையத்தில் பிறந்தது நாம் அவர்களை
அடையாளம் காணவேயன்றி அவர்களின் தகுதிக்கு மனிதர்களிடம் நற்சான்று பெற
அல்ல. அல்லாஹ் சொல்கிறான்: "(நபியே) நாம் உம்மை உலகத்தார் அனைவருக்கும்
ஓர் அருளாகவே அனுப்பியிருக்கிறோம் என. (குர்ஆன் 21:107)
அவன் அருளாக அனுப்பிய ரசூலுல்லாஹ்வை ஒரு
பொருளாக பதம் பிரிப்பதில் சில மனிதர்களுக்கு கொள்ளை ஆசை. அதிலென்ன
திருப்தியோ அவர்களேயறிவார்கள். |