முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

அன்பு எனும் சூரிய ஒளி

ஸ்ரீ. மதிவாணன்

அன்பல்லாதது ஆன்மிகம் இல்லை. ஆனால், அந்த அன்பு என்பது நம்மைப் படைத்த இறையை மட்டுமன்றி, அவன் படைத்த உலகக் கூட்டமைப்பையும், இயற்கையையும், வாழ்வின் ஒவ்வோர் அங்கத்தையும், சக உயிர்களையும், இறைமையைத் தேட அடிப்படைக் காரணங்களாயுள்ள வாக்கு - காயம் - மனம் ஆகியவற்றையும், ஏன், இவற்றையெல்லாம் திரிபற நிறைவேற்றி வாழ உதவும் உணவையுங்கூட நேசிப்பதுவேயாம்!

மக்களும் துறவு தர்மத்தையே ஏற்று நல்லுணவுகளை வெறுத்து விட வேண்டுமென வற்புறுத்துவது ஆன்மிகத்தைத் தவறான பாதையில் திருப்புவதாகும்.

தெய்வ மூர்த்திகளின் தத்துவங்களைக் கருத்திற்கொண்டு அவற்றுக்கேற்ப நிவேதனங்களையும், நிவேதிக்கும் வழிமுறைகளையும், நோன்பு நோற்றல் மற்றும் நோன்பு முடித்தல் போன்றவற்றையும் வரையறுத்தது ஆன்மிக சிரோன்மணிகளான முனிபுங்கவர்களும் ரிஷிகளுமே!

காலையினின்று பச்சைத் தண்ணீரும் பருகாது நோன்பு காத்து, உச்சிப் பொழுதின் முன் நானாவிதச் சுவை மிகு நிவேதனப் பொருள்களைத் தெய்வத்தின் முன் படையலிட்டு, அப்பண்டங்களின் மேல் மனம் செலுத்தாமல் இறையை முழு மனத்துடன் வழிபடுவதென்பதே ஓர் அற்புதமான ஆன்மிக நிலைப் பயிற்சிதான்.

துறவின் முகட்டைத் தொட்ட துர்வாஸ முனிவரும், அம்பரீஷ மன்னனுடன் ஒன்றாக அமர்ந்து ஸத்ய நாராயண பூஜையின்பாற்பட்ட உணவையருந்த விரும்பி வந்தாரெனில், நல்லுணவென்பது (அளவுக்கு மிஞ்சாத வரை) ஆன்மிகத்தின் பகையல்ல என்பது கண்கூடு!

பிரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம் ஆகிய ஒவ்வொரு நிலைக்கும், தனித்தனியான உணவு முறைகள் நமது ஆன்மிக நெறிமுறைகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றை மீறுவதோ, மாறுவதோ மட்டுமே அவரவர் ஏற்றுள்ள அறங்களுக்கு ஊறு விளைவிக்க ஏதுவாகும்.

நாம் உண்ணும் உணவு எத்தன்மையதாயிருப்பினும், அதை மனத்தளவில், இறைவனுக்கு நிவேதித்து விட்டே உண்ண வேண்டும் என்கின்றன நமது சாஸ்திரங்கள். அப்போது, அந்த உணவை நாம் (இறைவனுக்கே அர்ப்பணமாக்கும் சங்கற்பத்தில்) எந்தளவு நேசிக்க வேண்டுமென்பதும், அவ்வாறு நேசிக்காவிடில், அது தெய்வ நிவேதனத்திற்குரிய தத்துவத்தைப் பெறாது என்பதும் ஆன்மிக முற்றுநிலையை எட்டியோரால் நன்குணரப் பெறும்.

அதேபோல், புலனின்பங்களைப் பற்றி விவாதிக்கையில், ஆணை மட்டும் முன்னிலைப்படுத்தி, "மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னேயே ஓடாதே'' என "அறிவுரை'' பகர்வதும், பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே காட்டி, ஆன்மிகத்தில் அவளது பங்கை வலிந்து பறிக்கும் வன்செயலாகும். சமநிலை இல்லாத ஆன்மிகம் ஒருபுறம் சாய்த்துக் கட்டப்பட்ட தராசைப் போன்றதே!

எல்லா இறை மார்க்கங்களும் (மதங்கள்) புலனின்பங்களை முறைப்படுத்தி இறைநிலையை எட்டுவதே உச்சக்கட்ட நோக்கம் எனத்தான் வலியுறுத்துகின்றன. எந்த மதமும், "புலனின்பங்களை அனுபவிக்கத் தந்தமைக்காகவே இறையை வழிபட வேண்டும்'' எனச் சொல்வதில்லை.

பக்திநிலை மதங்கடந்த பொதுநிலை!

புலனின்பங்களை ஆன்மிக நோக்கில், அருவருப்பானவை எனக் கணக்கிடுதல் பொருந்தாது. முற்ற முழுக்கப் பிரும்மசாரியான சங்கர பகவத்பாதர், மண்டனமிசிரின் துணைவியார் சரஸவாணியுடன் வாதிடுகையில், காமம் பற்றிய கேள்விக்கு விடை கூற வழியின்றி, ஒருநாள் அவகாசம் கேட்டுப் பின் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மன்னனின் உடலுட் புகுந்து, மேற்படி உணர்வின் தன்மையை அறிந்து திரும்பி வந்து விடையிறுத்த காதையை இங்கே நினைவுகூர வேண்டும்.

சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் இறைவனே தூது சென்றதும், காளமேகப் புலவர் தம் காதல் நங்கைக்காக வைஷ்ணவம் விட்டுச் சைவம் தழுவியதும், புலனின்பங்கள் ஆன்மிகத்துடன் தொடர்புள்ளவையே என நிரூபிக்கும்.

"தன்னலம் கருதாத அன்பு கடவுளின் அன்பே'' எனும் தத்துவத்திலும், அக்கடவுள் படைத்த அனைத்துயிர்களிடமும் (குறிப்பாக ஏழைகள், முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர் போன்றோரிடம்) அவ்வன்பைச் செலுத்துவது சிறந்த இறைத்தேடற் சாதனமாகும் என்ற உண்மை பொதிந்துள்ளது.

இணையற்ற தொண்டினால் ஏழையரின் ஒளிவிளக்காய் வாழ்ந்து நிறைந்த அருளாளர் அன்னை தெரஸா இதற்கு மிகச்சிறந்த உதாரணம்!

ஏனெனில், அவர்தாம் ஏழையரின் பசியெனும் நோயை உணவு கொண்டு தீர்த்து, அன்னோரின் தொண்டிலேயே தம் ஐம்புலன்களையும் இருத்தி, அன்பெனும் பெருநிழலில் அவர்களை வைத்துக் காத்து, இறைவனையும் அடைந்தார்!

அன்பென்பது சூரிய ஒளி போன்றது. அதற்கு ஆன்மிகம், நாத்திகம், நல்லோர், தீயோர் எனும் பேதமேதும் இல்லை.

உங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப....