முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

வெற்றி பெறக் கற்றுக் கொள்வோம்

மு.அ. திருநாவுக்கரசு

நன்றி : தினமணி நாளிழ் 05-03-2007

தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என பல்வேறு வகையான நிறுவனங்கள் உலகெங்கும் இயங்கி வருகின்றன.

இவைகள் அனைத்துமே லாபகரமாக வெற்றிகரமாக இயங்குவதில்லை. மிகச்சிலவே வெற்றிகரமாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னேறி வருகின்றன. எப்படி இது நிகழ்கிறது? இத்தகைய நிறுவனங்களின் சக்தி எது? பலம் என்ன? வெற்றிக்கான ரகசியங்கள் யாவை?

பத்து இருபது நபர்கள் பணிபுரியும் சிறிய நிறுவனமானாலும் சரி அல்லது ஆயிரம், இரண்டாயிரம் நபர்கள் பணிபுரியும் பெரிய நிறுவனமானாலும் சரி, அந்நிறுவனத்தின் நீடித்த வெற்றிக்கு முக்கியக் காரணி அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட மனிதர்களே ஆகும். குறிப்பாக நிறுவனத்துடன் நேரிடையாகத் தொடர்புடைய நபர்களின் சக்தி, பலம், திறமை இவைகளின் பின்னணியில்தான் அந்நிறுவனத்தின் முன்னேற்றம் உள்ளது.

நாம் பணிபுரியும் நிறுவனம் முன்னேறுகிறது, நிறுவனத்தின் முன்னேற்றத்தில் நமது முன்னேற்றமும் உறுதி செய்யப்படுகிறது என்ற உணர்வு ஒவ்வோர் ஊழியருக்கும் ஏற்பட்டால் மட்டுமே நிலைத்த வெற்றியை அந்நிறுவனம் பெற முடியும்.

நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் தத்தம் பணி குறித்து தெளிவான புரிதல் இருக்கும்படி நிர்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பணிகளில் ஈடுபட அவரவர்களுக்குரிய திறமைகளும் இருக்குமாறு உறுதி செய்து கொள்ளவேண்டிய கடமையும் நிர்வாகத்துக்கு உண்டு. பணியாளர்களை ஊக்குவித்து, நம்பிக்கையுடன் பணியாற்றினால் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொய்வில்லாமல் கொண்டு செலுத்த இயலும் என்ற மனப்பாங்கு நிலவ நிர்வாகத்தினர் வழிவகை செய்ய வேண்டும்.

நிறுவன ஊழியர்களிடையே வெளிக்கொணரப்படாத பல்வேறு திறமைகள் பொதிந்து கிடக்கும். அவற்றைக் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும். உலகில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்கள் இத்தகைய ஏற்பாடுகளை அவ்வப்போது மேற்கொள்வதை வெற்றிக்கான ஒரு யுக்தியாகவே கடைப்பிடிக்கின்றன.

நிறுவனத்தின் வளர்ச்சியில் பணியாளர்களின் வளர்ச்சியும் இருப்பதை நிறுவனத்தில் உறுதி செய்தால்தான் பணியாளர்கள் நம்பிக்கை தளராமல் தொடர்ந்து மன ஊக்கத்துடன் பணிகளைத் தொடர்வார்கள். எனவே ஒவ்வொரு பணியாளருக்கும் உரிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இதர பயன்கள், பணியாளர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். இல்லையெனில் பணியாளர்களிடையே பணியில் மனநிறைவு குறைந்து நிறுவனத்தை விட்டு வெளியேற முனைவார்கள். இதனால் காலப்போக்கில் இத்தகைய நிறுவனத்தின் முன்னேற்றம் தடைபடும். இன்றைய போட்டி உலகில், எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு அடுத்த முக்கியக் காரணிகள் தொழில்நுட்பமும், சந்தை வாய்ப்புகளும்தான். நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் அல்லது சேவைகளின் தரம் குறையாமல் இருப்பதில் தொழில்நுட்பமும், பணியாளர்களின் திறமையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நிறுவனத்தின் பணிகள் வெறும் இயந்திரங்களினால் மட்டுமே நிறைவேற்றப்படவில்லை. இயந்திரங்களுக்குப் பின்னால் பொறுப்புணர்ச்சியும், செயல்வேகமும், திறமையும், சுயசிந்தனைப் போக்கும் கொண்டுள்ள மனிதர்கள் உள்ளதை மறந்துவிடக் கூடாது. இத்தகைய மனிதர்களைப் பெற்றுள்ள நிறுவனம் ""பொன்முட்டையிடும் வாத்து''.

நிறுவனத்தில் இத்தகைய பணியாளர்களாக அனைவரும் அமைவது எளிதான காரியமல்ல. ஊழியர்களிடையே நிறுவன நடவடிக்கைகளை முறையாகப் புரிந்தவர்கள் யார் யார்? புரிவதற்கு முயற்சி எடுக்காதவர்கள் யார் யார்? என பணியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்து கொண்டு நிர்வாகத்திறன் பெற்றவர்களை நிறுவனம் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இன்றைய உலகமய பொருளாதாரச் சூழலில் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் பெரிய சவாலைச் சந்தித்து வருகின்றன.

எனவே, மேலே குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள மனிதவளம் குறித்த விவரங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பன்னாட்டு நிறுவனங்களின் சவால்களை எளிதாகச் சமாளிக்க முடியும்.

(கட்டுரையாளர்: ஆராய்ச்சி அலுவலர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கை, காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்).

உங்கள் நண்பருக்கு இந்தப்பக்கத்தை அனுப்ப....