முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

Refer to your friend

சர்வேயர் அளக்காமல் மனைகளை வாங்காதீர்!

வி. கிருஷ்ணமூர்த்தி

நிலம் வாங்கும்போது அதன் நீளம், அகலம், எல்லைகள் ஆகியவற்றை சரி பார்த்துகொள்ள வேண்டியது வாங்குவோரின் கடமையாகும். ஆனால், பலரும் நேரில் சென்று பார்க்கிறார்களே தவிர நிலத்தைதனியாக அளந்து பார்ப்பது இல்லை

தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவரான ரமேஷ், சென்னைப் புறநகர்ப் பகுதியான முடிச்சூரில் ஒன்றரை கிரவுண்ட் நிலத்தை வாங்கினார். சொந்தமாக நிலம் வாங்குவதே பெரிதாக இருந்த அந்தக் காலகட்டத்தில் மனைப்பிரிவை உருவாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் காட்டிய நிலத்தைத் தேர்வு செய்து வாங்கினார்.

மனைப்பிரிவை உருவாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் காட்டிய அடையாள கற்களை நிலத்தின் எல்லைகளாக நம்பிய ரமேஷ், தனியாக நில அளவை அதிகாரியைக் கொண்டு நிலத்தை அளந்து பார்க்கவில்லை.

மேலும், அடுத்தடுத்து இருந்த மற்ற நிலங்களுடன் தனது நிலத்தையும் பார்த்த ரமேஷ், தான் வாங்கிய நிலம் சரியாக முறைப்படி அளக்கப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கும் என விற்பனையாளர்களை நம்பிவிட்டார்.

தனக்குள்ள வசதிக்கு ஏற்ப குறைந்த விலை என்பதால், நிலத்தின் ஆவணங்களை மட்டும் சரிபார்த்துவிட்டு நிலத்தை வாங்கிய அவர், உடனடியாக அதனை பதிவும் செய்துவிட்டார்.

தனது வேலை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட காரணங்களால், அப்போது அவ்வளவாக வளர்ச்சி அடையாத முடிச்சூரில் குடியேறாமல் நிலத்தை அப்படியே வைத்துவிட்டார். இந்த நிலையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தான் ஆசையாக வாங்கிய நிலத்தில் வீடு கட்ட விரும்பினார்.

இதற்காக ஒரு கட்டட ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, உள்ளூர் கூலி ஆட்களை அழைத்து நிலத்தில் இருந்த முட்புதர்கள், தேவையற்ற செடிகளை அகற்றினார். ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து புதிய வீடு கட்டும் பணிகளுக்காக நிலத்தின் ஒரு பகுதியில் பூஜை நடத்தினார்.

பூஜை முடிந்த சில நாள்களில் ஒப்பந்ததாரர் கட்டட வரைபடம் தயாரிப்பதற்காக நிலத்தின் நீள, அகலம் உள்ளிட்ட விவரங்களை அளந்து மனைப் பிரிவு வரைப்படத்தில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.

அப்போது தான், புதிய வீடுகட்ட ரமேஷ் பூஜை செய்தது தனது நிலத்தை ஒட்டியுள்ள, அடுத்தவர் நிலத்தில் எனத் தெரிய வந்தது. இந்த விவரம் ரமேஷ் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கும் மனதளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிதாக அளந்ததன் மூலம் தெரியவந்த விவரங்கள் அடிப்படையில் தனது நில எல்லைக்குள் கட்டடம் கட்டும் பணியை அவர் தொடங்கினார்.

இது போன்ற பிரச்னை ரமேஷூக்கு மட்டுமல்ல, இவரைப் போன்று பலரும் இத்தகைய அதிர்ச்சிகளைச் சந்தித்து வருகின்றனர். சிலர் தனது நிலம் என நினைத்து அடுத்தவர் நிலத்தில் போர்வெல் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட சம்பவங்களும் உண்டு.

சில சமயங்களில் இதுபோன்ற பிரச்னைகள் பரஸ்பரம் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டும், சில சம்பவங்கள் உரிமையியல் வழக்குகளாக நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.

அடுத்தடுத்து வீடுகள், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லாத பகுதிகளில் நிலத்தை வாங்கிய பலருக்கும் இது போன்ற பிரச்னைகளைச் சந்தித்த அனுபவம் இருக்கும்.

காரணம் என்ன? நில விற்பனைப் பதிவில் ஆள்மாறாட்டம் செய்தது, போலி ஆவணங்கள் போன்றவற்றால் நடைபெறும் மோசடிகளுக்கு அடுத்தபடியாக நிலத்தின் எல்லை வரையறை தொடர்பான பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

நிலம் வாங்கும்போது அதன் நீளம், அகலம், எல்லைகள் ஆகியவற்றை சரி பார்த்துக் கொள்ள வேண்டியது வாங்குவோரின் கடமையாகும். ஆனால், பலரும் நிலம் வாங்கும்போது நேரில் சென்று பார்க்கிறார்களே தவிர நிலத்தைத் தனியாக அளந்து பார்ப்பது இல்லை.

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளில் பல இடங்களில் இதுபோன்ற பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. புறநகர்ப் பகுதிகளில் நிலம் வாங்கும் பலரும் நிலத்தைச் சுற்றி வேலி அல்லது சுற்றுச்சுவர் கட்டி தொடர்ந்து முறையாக பராமரிப்பது இல்லை.

தொடர்ந்து பல ஆண்டுகள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நிலங்களை வாங்குவோர் தான் இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
 

Courtesy:Dinamani 05/04/2008