முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

நபிகளாரை ஒரு பொழுது காண நேர்ந்தால்...

வறுமையுந் தீரும்; நோயும்விட் டகலும்;

மனத்தினிற் கவலையும் நீங்கும்;

சிறுமையும் அகலும்; புத்தியும் பெருகும்;

தீவினை வந்தட ராது!

 

தெறுபகை சிதையும்; செல்வமும் வளரும்;

தேகமும் சிறந்து பூரிக்கும்;

உறுபவந் தொலையும்; முகம்மதை யெவர்க்கும்

ஒருபகற் காண்கிலென் றுரைப்பார்!


 

-உமறுப்புலவர் சீறாப்புராணம் : 363

பொருள்:

நபி முகம்மது சல்லல்லாஹ் அலைஹிவசல்லமவர்களை யாவர்களாயினும் ஒரு பகற்பொழுது பார்ப்பார்களேயானால், அவர்களுக்கு 'தரித்திரமும் நீங்கும்; பிணிகளும் சரீரத்தை விட்டு ஓடும்; மனசின் கண்ணுள்ள சஞ்சலமும் தீரும்; சிறுமையும் போகும்; அறிவும் அதிகரிக்கும்; கொடிய செயலானது வந்து நெருங்காது; தங்கிய பகைமை கெடும்; சம்பத்தும் ஓங்கும்; சரீரமும் சிறப்புற்றுப் பூரிக்கும்; பொருந்திய பாவமும் ஒழியும்'. என்று சொல்லுவார்கள்.

-விளக்கவுரை: மாகாமதி - சதாவனி செய்குத் தம்பிப் பாவலர்.

 

 

உங்கள் நண்பருக்கு இந்தப் பக்கத்தை அனுப்ப...