முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

Refer to yourfriend

விழிப்புணர்வு: பான் கார்டு வாங்குவது பிரச்சினையா?
பி. முரளிதரன்

வீட்டு மனை வாங்குவது, பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வங்கி டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது எல்லாவற்றும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு ( PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலை.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

மேலும், இந்தக் கார்டை வாங்கினால் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களுக்குக் விடைகாணும் பொருட்டு, பான்கார்டை வழங்குவதற்காக, மத்திய வருமான வரித்துறையின் அங்கீகாரம் பெற்ற யூ.டி.ஐ.டெக்னாலஜி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பாபுவைச் சந்தித்துப் பேசினோம்.

""மத்திய அரசு 200 77 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது. பத்து இலக்க எண்ணைக் கொண்டது இந்த பான் கார்டு.

பான் கார்டு வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும் என்று பயப்படுகின்றனர். உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் டிமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இந்த டிமேட் கணக்கைத் துவங்க பான் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ. 25,000-க்கும் அதிகமான தொகையில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் போதும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்கு ஓட்டலில் தங்கும் போது ஓட்டல் பில் மேற்கண்ட தொகைக்கு மேல் செலுத்தும் போதும் பான்கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ரூ.50,000 மற்றும் அதற்கும் மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்யும் போது பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அலுவலகம் மூலம் பான் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சேவை மையங்களை (சர்வீஸ் சென்டர்திறந்துள்ளோம். அங்கு சென்று அணுகினால், இந்தக் கார்டைப் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.
பான்கார்டு பெற விரும்புவோர் 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். டெலிபோன், மின்சார ரசீது, கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட கடிதம், வாடகைக் கட்டண ரசீது அல்லது எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் போன்ற இவற்றில் ஏதாவது ஒன்றை படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றையும் இணைத்தல் வேண்டும். மைனர்கள் பெயரில் விண்ணப்பிக்கும் போது அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களது பெயரில் உள்ள இதேபோல் ஏதாவது சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், திருமணமான பெண்கள் தங்களது பெயரில் விண்ணப்பிக்கும் போது, கட்டாயம் தங்களது தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

இதேபோல், பான் கார்டு பெறுவதற்காக ரூ.60 கட்டணமாகவும், சேவைக் கட்டணமாக ரூ.7-ம் சேர்த்து மொத்தம் ரூ.67 மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால், சிலர் இந்த பான்கார்டை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.500 வரை கூட பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற, ஆட்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், விண்ணப்பித்த பத்து வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

சிலர் பான் கார்டு வாங்குவதை ஒரு மிகப் பெரிய வேலையாகக் கருதி, சில ஏஜென்ட்களிடம் அளவுக்கு அதிகமாகப் பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். ஒரு சிலர் பான்கார்டு வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு கார்டை வாங்கித் தராமல் ஏமாற்றும் சில செயல்களும் ஆங்காங்கே நடக்கின்றன. எனவே, முடிந்த அளவுக்கு நாமே அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது.

இதேபோல், ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கின்றனர். இதுவும் சட்டப்படி குற்றமாகும். இதுபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தால் அவற்றை சரண்டர் செய்ய வேண்டும். இதேபோல், பான்கார்டு வைத்துக் கொண்டு ஏதாவது மோசடி செயல்களில் ஈடுபட்டாலும், அவர்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள்.

"ஆன்-லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
www.pancard.utitsl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். "ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் போது, ஃபோட்டோ மற்றும் கட்டணம் ஆகியவற்றைத் தனியாக எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்'' என்றார்.
 

Courtesy: Dinamanikadir