முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

எதிர் கொண்டு வரவேற்போம்

நெருப்புக்குள்ளிருக்கும் ஈரத்தை-விரல்களால் தொட்டெரியும் வியப்புக் குரிய மனோ வீரம்-

கடலில் பாதச் சுவடுகளைப் பதித்தாற் போல்-உலகோரெல்லாம் விழி மலர்த்தும் அதிசயம்-

ஆனால், வியப்போ, அதிசயமோ தமக்குள் வெளிப்படுத்தத் தேவையின்றி, உலக மக்கட் தொகையில் நான்கில் ஒரு பங்கினர், இயல்பாக மேற்கொள்ளும் ஓர் இணக்கம்-வணக்கம்!

ஆம், நோன்பு, நம்மை வசப்படுத்தவும் நிசப்படுத்தவும் வந்திருக்கிறது.

மழைக்கும் புயலுக்கும் கூட சேதமுறாத கூட்டை,  தூக்கனாங் குருவி, கைகளின்றி தன் சிறு அலகால் இவ்வளவு நேர்த்தியாக எப்படிக் கட்ட முடிகிறது? எனும் ஆச்சர்யக் கேள்வி போல்-

முஸ்லிம்களை நோக்கி, உலகின் முகமெல்லாம் ஆச்சர்யங் கொள்ள- ரமலான் மாதம், ராட்டினம் சுற்றி வருகிறது!

"இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப் பட்டிருந்தது போல், உஙகள் மீதும் நோன்பு விதியாக்கப் பட்டுள்ளது. (அதன் மூலம்) நீஙகள் பயபக்தி உடையவர்களாகலாம். (2:183)

இக் குர்ஆன் வசனம், நோன்பின் நுகர்வை நமக்கு வலியுறுத்துகிறது.

நோன்பு என்பது எளிதானதல்ல.,

பசி மற்றும் அய்ம்புலன்கள் எனும் கன்றை, துள்ளாமல் அடக்கி, இறையச்மெனும் கயிற்றில் கட்டிவித்தல் பயபக்தியுடையோர்க்கே சாத்தியம்.

தீக்கனல் போன்று நெருங்கத் தயக்க மூட்டும் நோன்பு, அதை நோற்கத் தொடங்கிவிட்டால் அவர்க்கு நுங்குபோல் இனிமை பயப்பதாக அமைந்து விடுகிறது என்பதை, தீன்குறள்-

"கங்கெக்கும் நோன்பு கடிதெனினும் உள்ளுவப்பின்

நுங்கெக்கும் நோற்பார் தமக்கு"

என துலக்கி விளக்கியுள்ளது.

எனவே, கடமையான அனைத்து முஸ்லிம்களும் நோன்பை நோற்கவும் வசதியுடைய பெருமக்கள் ஏழைவரியாம் 'ஜகாத்'தை முழுமையாக வழஙகவும் இதயப்பூர்வமாக ரமலான் நோன்பை எதிர்கொண்டு வரவேற்போமாக!