முதல் பக்கம்

வழுத்தூர்.காம

எங்களுக்கு எழுத..

மங்கி வரும் சமூக உணர்வு

சி. அருள் ஜோசப் ராஜ்

சாலையில் ஒருவர் திடீரென விழுந்திருக்கிறார். அவரைச் சுற்றி கூட்டம். 'குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறான்' என்று ஒரு குரல், 'பையில ஏதேனும் இருக்கா பாரு, செல்போன் உள்ளதா?' - இப்படி சிலர் கூறினர். அருகில் சென்று பார்த்தபோது, அவர் என்னுடன் பணிபுரியும் நண்பர் என்பது தெரியவந்தது. குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கமுற்று விழுந்திருக்கிறார் என்பதை அறிந்து, ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தால் எனது நண்பர் உயிரிழக்கக் கூட நேரிட்டிருக்கலாம். மனித நேயமும் சமூக உணர்வும் மங்கி வருகின்றன.

சாலையில் குப்பையைக் கொட்டுகிறார் ஒரு பெண்மணி. ''நீ கொட்டு, யார் கேட்பது என்று பார்ப்போம்? அவனவன் ரோட்டையே ஆக்கிரமிப்பு செய்கிறான். அதைவிட குப்பையைக் கொட்டுவது தப்பா போச்சா?'' என்று தவறை நியாயப்படுத்துகிறார் அவளது கணவர். தங்களது இல்லங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதுபவர்களுக்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சமூக உணர்வு ஏற்படுவதில்லை.

அடுத்து, பிரச்னைக்குரிய விஷயம் - கழிவுநீர்க் கால்வாய்கள். அவற்றை முறைதவறிப் பயன்படுத்துபவர்கள்தான் இன்று அதிகம். டீக்கடை அல்லது தெருவோரக் கடைகள் அருகில் செல்லும் இக்கால்வாய்கள் குப்பை மேடாக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தவறுகளை - எங்கோ ஒருவர் அரிதாகத் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டால் அவரது மன தைரியத்தைப் பாராட்டாமல் பலர் ''இத்தனை பேருக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன்?'' என்று கூறி அவரது சமூக உணர்வை கொச்சைப்படுத்துவதும் நம்மவர்கள்தான். எதைச் சமூக நலன் கருதி செய்யக் கூடாது என்று கருதுகிறோமோ, அதைச் செய்வதை நம்மவர் சிலர் சாதனையாகவே கருதுகிறார்கள். ''இங்கு போஸ்டர் ஒட்டாதீர்கள்'' என்று எழுதியிருப்பார்கள். மறுநாள் பார்த்தால் விளம்பரம் எழுதப்பட்ட இடத்தில் மிகச்சரியாக போஸ்டரை ஒட்டி அதை மறைத்திருப்பார்கள். சாலையின் மறைவான பகுதி, டிரான்ஸ்பார்மர் போன்றவை சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிடுகின்றன. இதுபோன்ற செயல்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது?

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற விஷயங்களில் நாகரிகம் வளர்ந்துள்ளதைக் காண முடிகிறது. குப்பை பற்றிய பிரச்னையே இருப்பதில்லை. தெருக்கள் சுத்தமாக உள்ளதைப் பார்க்கிறோம். விதிகளை மீறுவோர் இல்லை.

நடைபாதைகள், பாதசாரிகளின் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டவை. நடைபாதைகளில் கடைவிரித்து,  நடந்து செல்வோருக்கு தொந்தரவு தருவது மட்டுமல்லாமல், பாதசாரிகளை மிரட்டுவதும் எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இவர்களுக்கு நகராட்சியால் டோக்கன் வழங்கப்படுகிறது என்பதாலா அல்லது நடைபாதை அவருக்கும் உரிமையுடையது என்பதாலா? - சாலை ஆக்கிரமிப்பு, இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. நகர்ப்புறங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் சில நாள்களில் அதே இடத்தில் காளான் குடைகளைப்போல மீண்டும் ஆக்கிரமிப்பு நடப்பதும் வழக்கமாகிவிட்டது. கடை, வீடுகள் என்று பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சிலர் அனுமதி இன்றி கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளும் கிடைத்து விடுகிறது என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

சாலையின் மையத்தில் கார் மற்றும் வாகனங்களை நிறுத்திவைத்துக் கொண்டு எதிரில் வரும் வாகனத்தில் உள்ள நண்பரிடம் பேசுவதும், நினைத்த இடத்தில் வாகனத்தை வளைத்துக்கொண்டு சென்று பின்னால் வருபவருக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சமூக உணர்வற்ற செயல்களே. நூல் நிலையம்,  பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், விமான நிலையப் பகுதிகளில் சமூக உணர்வு அதிகம் தேவை. இத்தகைய இடங்களில் உபயோகிப்பாளர்கள் ஏற்படுத்தும் அசுத்தமான சூழ்நிலை மற்ற பயணிகளுக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.

பொது இடங்களில் புகைபிடித்து மற்றவருக்குத் தொந்தரவு தருவோர் ஏராளம் உள்ளனர். சிகரெட் புகைப்பவரைவிட அவர் வெளியிடும் புகையால் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம். அருகில் இருப்பவர் புகைத்தலை விரும்பாதவராக இருப்பார் அல்லது பெண்ணாக இருப்பார், அதன் ஒவ்வாமையால் இருமிக் கொண்டிருப்பார். புகைப்பவர் எதுவுமே அறியாதவர்போல் ரசித்து இன்பமாகப் புகைத்துக் கொண்டிருப்பார். இன்னும் சிலர், கண்ட இடங்களில் எச்சில் துப்பி பிறருக்குத் தொல்லையையும் சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்துவர்.

எத்தனையோ முன்னேற்றங்கள் மூலம் சாதனை படைக்கும் நம்மவர்க்கு இன்னும் இதுபோன்ற விஷயங்களில் உணர்வு ஏற்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

சமூகம் என்பதில் அனைவரும் ஓர் அங்கம் என்ற உணர்வு நம்மிடையே மங்கத் தொடங்கியுள்ளது. யாரேனும் செய்யட்டும், நாம் அதைச் செய்து ஏன் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பற்ற எண்ணமுமே இன்றைய சமூகக் குற்றங்களுக்குக் காரணம். சமூக உணர்வுடைய சிலரது செயலை சிலர் போற்றினாலும், பலர் ஏளனம் செய்வது உண்டு. இத்தகைய சமூக உணர்வுடைய சிலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் சமூகம் சற்றேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்தகையோரை போற்றாவிட்டாலும் சமூகம் தூற்றாது காக்கட்டும். சமூக உணர்வு அனிச்சை செயலாக எழ வேண்டும். அப்படி ஒரு நிலை நம் நாட்டில் ஏற்பட்டால் இங்கும் நாம் ஒரு ஜப்பானை உருவாக்கலாம்.

உங்கள நண்பருக்கு இந்தப் பக்கத்தை அனுப்ப..