|
இன்று
பிறந்த பாலகர்களே! - எங்கள்
இனிய அன்பின் சலாம் - நீஙகள்
என்று பிறந்தவ ராயினும் - உண்மையில்
இன்று பிறந்தவராம்! - நபிசொற்படி
இன்று பிறந்தவராம்!
தூய நல்லெண்ணமும் தூய நல்லுள்ளமும்
தூய செயல் புரிந்து - அங்கு
துப்புரவோடு இருந்து
நாயன் அருள்நிறை நேயர் நபிவழி
நற்றடமே நடந்து - தக்வா
பொற்கடமைப் புரிந்து
ஆயும் திருத்தலம் அத்தனையும் சென்று
அடக்கத்தோடு இருந்து - பிரார்த்தனை
நடுக்கத்தோடு இறைஞ்சி
ஏய உணர்விக்கும் தங்கும் தலத்தினில்
இறை உணர்வோடு அமர்ந்து - தங்கி
குறையனைத்தும் களைந்து
பணிவுடன் நடந்திருந்தால் - இறை
பக்தியில் நனைந்திருந்தால் - (இன்று பிறந்த)
உலோக அழுக்குகள் உருக்கிய பின்னரே
உருப்படி யாயிருக்கும்! - மதிப்பும்
சிறப்புள்ளதாயிருக்கும்!
பாவ அழுக்குகள் அத்தனையும் 'தவ்பா'
பளிச்சிட வெளுத்திடுமே! - கண்ணீர்
விழத்தடம் உலர்த்திடுமே!
தாகமுடன் அருள்வேடகையுடன் - இறை
நாமம் ஜெபித்திருந்தால் - தொழுகை
ஜாமத்திலும் புரிந்தால்
மோகமுடன் அதிவேகமுடன் - பச்சா
தாபமுடன் இளகி - இறை
யச்சமுடன் கலங்கி
உடல் உயிர் இணைந்தபடி - அங்கு
கடமைகள் முடித்திருந்தால்... (இன்று பிறந்த) |
சுற்றிவர கஅபா - வெற்றி பெற தவ்பா -
பற்றிப் பிடித்திருந்தால் - 'ஸபா - மர்வா'
சுற்றி இளைந்திருந்தால்
குற்ற மனைத்தையும் கூவியழுதிங்கே
குமைந்து தவித்திருந்தால் - இறைமுன்
நாணி மன்றாடியிருந்தால்
பற்றுடன் இறையடிப் பற்றியே மற்றெல்லாப்
பற்றெலாம் தவிர்த்திருந்தால் - அரபாத்
பெருவெளி தவமிருந்தால்
முற்றிய தேசத்து மூலவர் நபிகள் முன் -
மோகன சலாம் உரைத்து - அதனால்
தேகமெல்லாம் விறைத்து
காரணம் கண்டிருந்தால் - மனிதப்
பூரணம் கொண்டிருந்தால்.... (இன்று
பிறந்த)
பேச்சை யொழித்திடு; உள்ளமே பேசட்டும்!
உறவைப் புதுப்பித்துக் கொள்! - நெஞ்சப்
பறவையை தூதனுப்பு!
மீட்சிப் பெறுவதற்கும் தீட்சைப் பெறுதற்கும்
சாட்சியாய் நபிகளின் மேல் - தூய
சலவாத்துச் சொல்வதே மேல்!
மூச்சுக்கு மூச்சு முறையீடும் செயல்பாடும்
முனைந்தங்கே சுழலட்டுமே! - கஅபா முன்
வினையங்கே சிறக்கட்டுமே!..
காட்சியில் தரிசனம் கண்முன்னே தெரிதல்போல்
கருமத்தில் ஒன்றிவிடு! - தூய
தருமத்தை வாரிக் கொடு!
உண்டி சுருக்கியும் உறக்கம் குறைத்திட்டு
உன்னை அழித்திடங்கே - பெருமை
தன்னைப் பொடித்திடங்கே!
(- இன்று பிறந்த) |